முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்ந்தது…

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இங்கிலாந்தின் மைய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து யாரும் எதிர்பாராத வகையில் கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்தது. இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்தது. யெஸ்  பேங்க் மறுமலர்ச்சி திட்ட நடவடிக்கையில் முன்னேற்றம் போன்ற சாதகமான அம்சங்கள் இருந்தபோதிலும் பங்கு வர்த்தகம் பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. வர்த்தகத்தின் முடிவில் சிறிய ஏற்றத்துடன் முடிந்தது.

ஹீரோமோட்டோகார்ப்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோகார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் அண்டி டி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, ஓ.என்.ஜி.சி. மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,048 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,430 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 62.45 புள்ளிகள் உயர்ந்து 35,697.40 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 6.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,458.40 புள்ளிகளில் நிலைகொண்டது.