முதலீட்டாளர்களுக்கு ரூ.1.16 லட்சம் கோடி லாபம்! சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்ந்தது….

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.1.16 லட்சம் கோடி லாபம்! சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்ந்தது….

கடந்த 2 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்ந்தது.

மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்துக்கு புத்துயிர் நோக்கில் மத்திய அரசு மேலும் பல ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும், சில பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

முதலீட்டாளர்களுக்கு லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், யெஸ் பேங்க், சன்பார்மா, இண்டஸ்இந்த் பேங்க், டாடா ஸ்டீல், ந்துஸ்தான் யூனிலீவர், வேதாந்தா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 22  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட், ஓ.என்.ஜி.சி., கோடக்பேங்க், எல் அண்டு டி மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,412 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,115 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.99 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.83 லட்சம் கோடியாக இருந்தது.

  

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 263.86 புள்ளிகள் உயர்ந்து 37,332.79 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 74.95 புள்ளிகள் அதிகரித்து 11,023.25 புள்ளிகளில் நிலை கொண்டது.