முதலீட்டாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 277 புள்ளிகள் உயர்ந்து..

 

முதலீட்டாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 277 புள்ளிகள் உயர்ந்து..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 277 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை கண்டிப்பாக குறைக்கும் என அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர். இதுதவிர அன்னிய முதலீட்டாளர்களுடன் விரைவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுபோன்ற சாதகமான அம்சங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது.

பங்குச் சந்தை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் யெஸ் பேங்க், டெக் மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரீட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,638 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 809 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 118 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.54 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.138.40 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவல் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 277.01 புள்ளிகள் அதிகரித்து 36,976.85 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 85.65 புள்ளிகள் உயர்ந்து 10,948.25 புள்ளிகளில் நிலை கொண்டது.