முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிந்தது

 

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 155 புள்ளிகள் குறைந்தது.

இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கிய போதும் பின்னர் படிப்படியாக சரிவு கண்டது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் ஆதரவாக  இல்லாததால் இன்று பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. யெஸ் பேங்க் பங்கின் விலை இன்று 15 சதவீதத்துக்கு மேல் குறைந்தது குறிப்பிடத்தக்கது. பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை இன்று 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. 

யெஸ் பேங்க்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் பார்தி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டெக் மகிந்திரா உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் பேங்க், இண்டஸ்இந்த் பேங்க், ஸ்டேட் வங்கி, சன்பார்மா, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 784 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,711 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 155 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.16 லட்சம் கோடியாக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.147.66 லட்சம் கோடியாக இருந்தது.

வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 155.24 புள்ளிகள் சரிந்து 38,667.33 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீ்ட்டு எண் நிப்டி 37.95 புள்ளிகள் வீழ்ந்து 11,474.45 புள்ளிகளில் முடிவுற்றது.