முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தந்த யெஸ் பேங்க்! குஷி படுத்திய விப்ரோ!

 

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தந்த யெஸ் பேங்க்! குஷி படுத்திய விப்ரோ!

யெஸ் பேங்கின் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவு முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருந்தது. அதேசமயம் விப்ரோவின் நிதிநிலை முடிவு எதிர்பார்ப்பை காட்டிலும் சிறப்பாக இருந்தது.

பங்குச் சந்தையில் பட்டியலிடபட்டுள்ள நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டு முடிவடைந்த பிறகும் தங்களது நிதிநிலை முடிவுகளை வெளியிட வேண்டும். அதன்படி, நிறுவனங்கள் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை கடந்த வாரம் முதல் வெளியிட்டு வருகின்றன. நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளை பார்த்து அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை ஒரளவு எளிதாக கணிக்கலாம். அதனால் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

காலாண்டு நிதிநிலை முடிவுகள்

தனியார் வங்கியான யெஸ் பேங்க் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் லாபமாக ரூ.113.76 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 91 சதவீதமாகும். அந்த காலாண்டில் யெஸ் பேங்க் லாபமாக ரூ.1,260.36 கோடி ஈட்டியிருந்தது. மேலும், கடந்த ஜூன் காலாண்டில் யெஸ் பேங்கின் மொத்த வாராக் கடன் 5.1 சதவீதமாக உயர்ந்து இருந்தது. முந்தைய மார்ச் காலாண்டில் மொத்த வாராக் கடன் 3.22 சதவீதமாக குறைந்து இருந்தது.

விப்ரோ

இந்தியாவின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நேற்று தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவை வெளியிட்டது. அந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,387.6 கோடி ஈட்டியிருந்தது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 12.58 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ரூ.2,120.8  கோடியை நிகர லாபமாக சம்பாதித்து இருந்தது. 2019 ஜூன் காலாண்டில் விப்ரோவின் செயல்பாட்டு வருவாய் 4.9 சதவீதம் உயர்ந்து ரூ.15,566.6 கோடியாக உயர்ந்தது.