முதலீட்டாளர்களின் ரூ.1.46 லட்சம் கோடியை பறித்து கொண்ட பங்குச் சந்தை

 

முதலீட்டாளர்களின் ரூ.1.46 லட்சம் கோடியை பறித்து கொண்ட பங்குச் சந்தை

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இந்த வாரமும் சரிவு கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.46 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பின்னடைவை சந்தித்ததால் இந்த வாரம் ஏற்றம் காணும் நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இருந்தனர். ஆனால், வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கின. அதற்கு அடுத்து வந்த 3 வர்த்தக தினங்களும் முதலீட்டாளர்களுக்கு சோதனை நாட்களாக அமைந்தது.

பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இல்லாதது, பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள், வாகன விற்பனை மந்தம், பருவமழை நிலவரம் திருப்திகரமாக இல்லாதது போன்ற காரணங்களால் தொடர்ந்து 4 நாட்களாக பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. இருப்பினும் ஒட்டு மொத்த அளவில்  இந்த வாரமும் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது.

பங்குச் சந்தை

இந்த வாரத்தின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.88 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்த பிறகு நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.34 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.46  லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 454.22 புள்ளிகள் குறைந்து 37,882.79 புள்ளிகளில் நிலை கொண்டது.