முக்கிய 8 துறைகள் உற்பத்தி வீழ்ச்சியால் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 362 புள்ளிகள் குறைந்தது

 

முக்கிய 8 துறைகள் உற்பத்தி வீழ்ச்சியால் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 362  புள்ளிகள்  குறைந்தது

முக்கிய 8 துறைகள் உற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இன்று பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 362 புள்ளிகள் குறைந்தது.

கடந்த செப்டம்பர் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. கடந்த செப்டம்பரில் வாகன விற்பனை மந்தமாக இருப்பதாகவே தெரிகிறது. 4 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி சரிவு கண்டது. நிறுவனங்கள் கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பதாக வெளியான யூக செய்திகள் போன்றவற்றால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

வாகன விற்பனை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், இண்டஸ்இந்த் பேங்க், ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஜ் உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 687 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,796 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 146 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.32 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.17 லட்சம் கோடியாக இருந்தது.

முக்கிய 8 துறைகள்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 361.92 புள்ளிகள் குறைந்து 38,305.41 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 114.55 புள்ளிகள் வீழ்ந்து 11,359.90 புள்ளிகளில் முடிவுற்றது.