முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்தது! மத்திய அரசுக்கு முற்றும் நெருக்கடி

 

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்தது! மத்திய அரசுக்கு முற்றும் நெருக்கடி

கடந்த அக்டோபர் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 5.8 சதவீதம் குறைந்துள்ளது. 2018 அக்டோபர் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 4.8 சதவீதம் உயர்ந்து இருந்தது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.

முக்கிய 8 துறைகள்

கடந்த அக்டோபர் மாதத்தில் முக்கிய 8 துறைகளில் உரம் துறையின் உற்பத்தி மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 5.8 சதவீதம் குறைந்துள்ளது. முக்கிய துறைகளின் உற்பத்தி குறைந்து இருப்பதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும் குறைந்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய 8 துறைகள் உற்பத்தி

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 0.2 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதம் உயர்ந்து இருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கண்டுள்ள நிலையில், கடந்த அக்டோபரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சரிவை சந்தித்து இருப்பது மத்திய அரசுக்கு கடும்  நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.