மீ டூ-வுக்கு ஆண்கள் மட்டும் தான் காரணமா?: பிக் பாஸ் விஜயலக்ஷ்மி

 

மீ டூ-வுக்கு ஆண்கள் மட்டும் தான் காரணமா?: பிக் பாஸ் விஜயலக்ஷ்மி

மீ டூ விவகாரத்தில் ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது என பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜயலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

சென்னை: மீ டூ விவகாரத்தில் ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது என பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜயலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை விஜயலக்ஷ்மி இந்த மீ டூ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சினிமாத்துறை மட்டுமல்லாது அனைத்து துறையிலும் கொடுக்கல் இருக்கும்போது அதற்கான எதிர்ப்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. அது போல் ஆரம்பித்த ஒன்று தான் இந்த மீ டூ. ஆண்-பெண் சம்மதத்துடன் தொடங்கிய இந்த விஷயத்தில் ஒருவரை மட்டும் குறை சொல்வது நியாயமாக இருக்காது.

ஆரம்பத்திலேயே ஒரு பெண் இதனை எதிர்த்திருந்தால் இத்தனை பெரிய விஷயமாக மாறியிருக்காது. ஒரு பெண் ஓகே சொல்ல, மற்ற பெண்களிடமும் இது கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு ஆண்கள் மத்தியில் உள்ளது. கொடுக்க ஒருவர் இருக்கையில், அதனை ஏற்கவும் சிலர் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் யாரையும், யாரும் அதட்டி உருட்டி மிரட்டி காரியம் சாதிக்க முடியாது. சிலர் அட்ஜஸ்ட் செய்துக் கொள்கின்றனர். சிலர் விலகிச் செல்கின்றனர். ஆகவே மீ டூ பிரச்னைக்கு அவரவர் எடுக்கும் முடிவு தான் தீர்வாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.