மீ டூ விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்து மத்திய அரசு உத்தரவு

 

மீ டூ விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்து மத்திய அரசு உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய மகளிர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பை: பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய மகளிர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்

இந்தியாவிலும் இந்த மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், மீ டூ பிரசாரத்தின் கீழ் பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய மகளிர் நல அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பெண்கள் வரிசையாக கூறி வரும் மீ டூ புகார்களின் நம்பகத்தன்மை குறித்து பேசிய மேனகா காந்தி, அனைத்து புகார்களையும் நம்புவதாக தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதும் மீ டூ பிரசாரத்தின் கீழ் பாலியல் புகார் கூறப்பட்டதற்கு பதிலளித்த மேனகா காந்தி, நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஷூட்டிங்கின் போது நடிகர் நானா பட்டேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் விசாரணை ஆணையம் அமைக்கும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.