மீ டூ புகார்களை விசாரிக்க சிறப்பு குழு: நடிகர் சங்க தலைவர் நாசர் தகவல்

 

மீ டூ புகார்களை விசாரிக்க சிறப்பு குழு: நடிகர் சங்க தலைவர் நாசர் தகவல்

மீ டூ புகார்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை: மீ டூ புகார்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குத் தனிமையில் நேரும் பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த மீ டூ(Me Too) என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல்வேறு பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

அதில் பெரும்பாலும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்களே அடி படுவதால், அதுகுறித்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் விசாரணை நடத்த வேண்டும் என சிலர் கூறி வந்தனர்.
 
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று கூடியது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்க தலைவர் நாசர், “நடிகர் சங்கத்தினருடைய சுயமரியாதை, உரிமைகளை காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தின் வழிகாட்டலின் படி விசாகா கமிட்டி அடிப்படையில் ஒரு பெருங் குழு ஒன்று உருவாக்கப்படும்.
அக்குழுவில்  பெரும்பான்மை மகளிர் உட்பட, மனவியல் ரீதியான  பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும்  இடம் பெறுவார். ஆண் பெண் வேறுபாடின்றி பிரச்சினைகளை பொதுவாக அக்குழு அணுகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படப்பிடிப்பு தளங்களில் அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும், சுயமரியாதைக்காகவும் ஒரு குழு அமைக்கவும் தயாரிப்பாளர் சங்கத்திற்குப் பரிந்துரைப்பதாக நாசர் தெரிவித்துள்ளார்.