மீனவர்களை காக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்:முத்தரசன் வலியுறுத்தல்

 

மீனவர்களை காக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்:முத்தரசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகளை காக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகளை காக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை, தொடர்ந்து நீடித்து வருகின்றது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 520 க்கும் மேற்பட்ட விசைபடகுகளில், கச்சத் தீவு அருகே சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் ஐந்து ரோந்து கப்பல்களில் அங்கு வந்து தமிழக மீனவர்கள் மீது கொடும் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததுடன், அவர்கள் பயன்படுத்திய வலைகளை அறுத்து பயன்படுத்த முடியாத வகையில் நாசப்படுத்தியுள்ளனர்.

விசைப்படகுகள் மீது, கப்பலை விட்டு மோதி உடைத்தெறிந்துள்ளனர். படகில் இருந்த மீனவர்களான ராமு, வர்க்கீஸ், தங்கவேல் மற்றும் காட்டுராஜா ஆகிய நான்குபேரும் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய பெரும் கொடுமை நடந்துள்ளதுடன், நால்வரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். மற்ற மீனவர்கள் தொழிலை மேற்கொள்ள இயலாமல் கரை திரும்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் அத்துமீறிய வன்முறை தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாதிப்புகள் ஏற்படும் போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு அவ்வப்பொழுது கடிதம் அனுப்புவதுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றது.

மத்திய அரசு தமிழக மீனவர்களின் உயிர், உடமை, தொழில் குறித்து கவலைப்படாத அரசாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.