மீண்டெழுந்ந ஆஸ்திரேலியா; தொடரை கைப்பற்றியது!

 

மீண்டெழுந்ந ஆஸ்திரேலியா; தொடரை கைப்பற்றியது!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது

புதுதில்லி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 5 போட்டிகள் கோண்ட ஒருநாள் தொடர் 2-2 என்று சமநிலை கண்ட சூழலில், கடைசி போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா , முதல் விக்கெட்டுக்கு 76 ரன்களும், இரண்டாவது விக்கெட்டுக்கு 199 ரன்களும் சேர்த்தது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 272/9 என்கிற ஸ்கோரை எட்டியது.

இந்திய தரப்பில், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஓரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இத்த ஆட்டத்தில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் தான் வீசிய முதல் 8 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுத்தந்த பும்ரா, தனது கடைசி இரண்டு ஓவரகளில் முறையே 19 மற்றும் 7 என மொத்தம் 26 ரன்களை கொடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இன்னிங்ஸின் கடைசி 4 ஓவர்களில் 42 ரன்களை திரட்டியது ஆஸ்திரேலியா.

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டிகளில் 250 ரன்களுக்கு மேல் இலக்கு துரத்தப்பட்டது இரண்டே முறை தான். அதிலும் இதற்கு முன் அவ்வாறு ஆனது 1996 உலக கோப்பையின்போது தான் என்றது ஒரு புள்ளி விவரம். 

கடினமான இலக்கை துரத்த தொடங்கிய இந்திய அணியில், ஸ்கோர் 15 ஆக இருந்தபோது தவன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 68 ரன்களாக உயர்ந்த போது கோலி 20 ரன்களிலும் 91 ரன்களை தொட்ட போது, பந்த் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்ததாக வந்த விஜய் ஷங்கரின் இன்னிங்ஸும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 21 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவை அத்தனையும் நடந்துகொண்டிருந்த பொழுது முறுமுனையில் ரோஹித் ஷர்மா களத்தில் தான் இருந்தார். அவரது இன்னிங்ஸின் 46ஆம் ரன், ஒருநாள் போட்டிகளில் அவரது எட்டாயிரமாவது ரன்னாக பதிவானது.

ஆனால் சிறிது நேரத்திலேயே ரோகித் ஷர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் 29ஓவர்களில் 132/6 என்று தடுமாறியது இந்திய அணி. அதன்பின் கூட்டணி அமைத்த கேதார் ஜாதவ் -புவனேஸ்வர் குமார் இணை 91 ரன்கள் சேர்த்த பின் பிரிந்தபோது, கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது.

புவனேஸ்வர் 54 பந்துகளில் 46 ரன்கள் (4×4) என்கிற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கேதார் ஜாதவ் 44 (57) 4×4, ஆட்டமிழக்க நேர்ந்தது. இத்தருணத்தோடு வெற்றி வாய்ப்பும் பறி போனது.

இறுதியில் 237 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழக்க, 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, அதன் மூலம் 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடர் வெற்றியின் மூலம், தொடர்ச்சியாக ஆறு ஒருநாள் தொடர்களை இழந்திருந்ந சோகத்துக்கு முடிவுரை எழுதியது ஆஸ்திரேலிய அணி. உஸ்மான் க்வாஜா அட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பத்தாண்டுகளுக்கு முன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்தியா. அதன்பிறகு அப்படிப்பட்ட அவலம் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தெரிந்திருக்கிறது. ஏற்கனவே இருபது ஒவர் தொடரையும் ஆஸ்திரேலியா 2-0 என்கிற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.