மீண்டுவந்து மீண்டும் செய்தி வழங்குவார்கள்! தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு குணசேகரனின் ஆறுதல் வார்த்தைகள்!!

 

மீண்டுவந்து மீண்டும் செய்தி வழங்குவார்கள்! தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு குணசேகரனின் ஆறுதல் வார்த்தைகள்!!

சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த உதவி செய்தி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. முன்னதாக பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயது பத்திரிகையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இந்நிலையில் மற்றொரு தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் குணசேகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “சத்தியம் தொலைக்காட்சி தனது செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்திருப்பதாக வந்திருக்கும் செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தைத் தருகிறது. 24 மணி நேரமும் செய்திகள் கொடுத்துவரும் ஓர் ஊடகம், ஒரு முக்கியமான தருணத்தில், மக்களுக்காக பணியாற்றவேண்டிய நேரத்தில், செய்தி வழங்குவதில் இருந்து விலகியிருக்கும் சூழல் எவ்வளவு கடினமானது, எவ்வளவு துயரமானது என்பதை சக ஊடகவியலாளன் என்ற முறையில் எம்மால் துல்லியமாக உணரமுடிகிறது. எனினும், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏற்பட்டிருக்கும் இந்தத் தற்காலிக நெருக்கடிகளில் இருந்து சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்பவே இருக்கிறது.

 

 

சோதனையான காலத்தை வென்று, சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் விரைந்து மீண்டு வருவார்கள்; மீண்டும் எப்போதும் போல செய்திகளை வழங்குவார்கள். எங்கள் மனம் உங்களுடனேயே இருக்கிறது. உங்கள் மீட்சியையும் சார்ந்தோர் நலனையுமே விழைகிறது. விரைந்து வாருங்கள்! மீண்டு வாருங்கள்! வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.