மீண்டும் வளர்கிறது பாஜக – அதிமுக உறவு?

 

மீண்டும் வளர்கிறது பாஜக – அதிமுக உறவு?

பாஜக மிகச்சிறந்த அரசாக மத்தியில் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளதன் மூலம் அதிமுக – பாஜக இடையிலான உறவு மீண்டும் வளர ஆரம்பித்திருக்கிறதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

சென்னை: பாஜக மிகச்சிறந்த அரசாக மத்தியில் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளதன் மூலம் அதிமுக – பாஜக இடையிலான உறவு மீண்டும் வளர ஆரம்பித்திருக்கிறதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இருந்த இணக்கமானது தற்போது சற்று குறைய ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அமைச்சர் ஜெயக்குமாரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க எண்ணிய பாஜகவுக்கு திமுக சிக்னல் காட்டவில்லை என்பதால் அதிமுகவுடனே மீண்டும் உறவை வளர்த்துக்கொள்ளலாம் என பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.

அதன் வெளிப்பாடாகத்தான் திமுகவுக்கு எதிராக அதிமுகவின் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்ததாம். அதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் சகோதரர் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்தது மட்டுமில்லாமல் திவாகரன் மகன் ஜெயானந்த்தையும் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது தென் மாவட்டங்களில் தினகரன் மற்றும் திமுகவை தனிமைப்படுத்துவதற்கும், தினகரனின் செல்வாக்கை குறைப்பதற்கும் ஏதுவாக திவாகரன் – அதிமுகவுக்கு இடையே சமாதான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக மிகச்சிறந்த அரசாக மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டை ஒரு ஆளுமைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தோடு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது மக்கள் நலன்களை பெற்று தர மத்திய அரசுடன் அதிமுக நல்லுறவுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.

பிரதமர் மோடியின் சகோதரர் சமீபத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்திருக்கும் சூழலில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மத்திய பாஜகவை மீண்டும் புகழ தொடங்கி இருப்பதால் அதிமுக – பாஜக உறவு மறுபடியும் ஆரம்பமாகி இருக்கிறது என பலர் கூறி வருகின்றனர்.