மீண்டும் ரிசர்வ் வங்கியின் மடியில் கை வைக்கும் மத்திய அரசு….. ரூ.45 ஆயிரம் கோடி வரை கேட்க திட்டம்…

 

மீண்டும் ரிசர்வ் வங்கியின் மடியில் கை வைக்கும் மத்திய அரசு….. ரூ.45 ஆயிரம் கோடி வரை கேட்க திட்டம்…

வருவாய் பற்றாக்குறை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் மீண்டும் இடைக்கால டிவிடெண்டாக ரூ.45 ஆயிரம் கோடி வரை கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.

தனது கரன்சி மற்றும் அரசு பத்திரங்களின் வர்த்தகம் வாயிலாகத்தான் இந்திய ரிசர்வ் வங்கிக்கு பெரிய அளவில் லாபம் வருகிறது. அதில் ஒரு பகுதியை தனது செயல்பாட்டு மற்றும் தற்காலிக செலவுகளுக்காக ஒதுக்கிறது. எஞ்சிய தொகையை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு கொடுத்து விடுகிறது. ரிசர்வ் வங்கி கொடுக்கும் டிவிடெண்ட் மத்திய அரசுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.1.76 லட்சம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. அதில் இந்த நிதியாண்டுக்கான டிவிடெண்ட் ரூ.1.48 லட்சம் கோடியும் அடங்கும். நிதிப்பற்றாக்குறை அதிகரித்த நிலையில், ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட் மத்திய அரசுக்கு பெரும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

மோடி அரசு

ஆனால் தற்போது வருவாய் பற்றாக்குறையாக உள்ள நிலையில், தனது செலவின தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான பணத்துக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் தனது பார்வையை ரிசர்வ் வங்கி பக்கம்   திருப்பியுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் இடைக்கால டிவிடெண்டாக கணிசமான பணத்தை கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.45 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு இடைக்கால டிவிடெண்ட் கேட்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.