மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது

 

மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது

தொடர் சரிவுக்கு பின் நேற்று ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம் இன்று மீண்டும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடக்கத்தில் மந்தகதியில் இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும், மூடிஸ் நிறுவனம் இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 5.8 சதவீதமாக குறைத்தது. இதுவும் பங்குச் சந்தைகளின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன்பார்மா உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, யெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, ஸ்டேட் வங்கி உள்பட 22 நிறுவன பங்குகளின்  விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 878 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 1,567 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 184 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.22 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.92 லட்சம் கோடியாக இருந்தது.

வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 297.55 புள்ளிகள் குறைந்து 37,880.40 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி  78.75 புள்ளிகள் வீழ்ந்து 11,234.55 புள்ளிகளில் முடிவுற்றது.