மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்ந்தது….

 

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்ந்தது….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்ந்தது.

பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைந்து இருந்ததால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். மேலும், ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் சிறிது தணிந்தது போல் காணப்பட்டது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

அல்ட்ராடெக்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட், எச்.டி.எப்.சி. வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா மற்றும் என்.டி.பி.சி. உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ், பார்தி ஏர்டெல், நெஸ்லே இந்தியா மற்றும் பவர்கிரிட் உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது.

இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,556 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 932 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.85 லட்சம் கோடியாக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 192.84 புள்ளிகள் அதிகரித்து 40,869.47 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 59.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,052.95 புள்ளிகளில் முடிவுற்றது.