மீண்டும் அள்ளிக் கொடுத்த பங்கு வர்த்தகம்…..முதலீட்டாளர்களுக்கு ரூ.2.80 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 986 புள்ளிகள் உயர்ந்தது…

 

மீண்டும் அள்ளிக் கொடுத்த பங்கு வர்த்தகம்…..முதலீட்டாளர்களுக்கு ரூ.2.80 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 986 புள்ளிகள் உயர்ந்தது…

தொடர்ந்து 2வது நாளாக இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 986 புள்ளிகள் உயர்ந்தது.

ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 3.75 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இதனால் வீடு, வாகன கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நபார்டு, எஸ்.ஐ.டி.பி.ஐ. மற்றும் என்.எச்.பி. ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு மறுநிதி வசதி ரிசர்வ் வங்கி வழங்குகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, மாருதி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்பட 23 நிறுவன பங்குளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா, இந்துஸ்தான் யூனிலீவர், டெக் மகிந்திரா மற்றும் சன்பார்மா உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,593 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,713 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 707 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.123.54 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.80 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. 

நெஸ்லே இந்தியா

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 986.11 புள்ளிகள் உயர்ந்து 31,588.72 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 273.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,266.75 புள்ளிகளில் முடிவுற்றது.