மீடூ விவகாரத்தில் சட்டம் எங்களை கைவிட்டு விட்டது: சின்மயி புலம்பல்!

 

மீடூ விவகாரத்தில் சட்டம் எங்களை கைவிட்டு விட்டது: சின்மயி புலம்பல்!

மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கு தொடர்ந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

சென்னை: மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கு தொடர்ந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகி சின்மயி,  கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். வைரமுத்துவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியில் பாடகி சின்மயி கலந்து கொண்டார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பாரம்பரிய கலாச்சார இசையான பறை,மேளம், நாதஸ்வரம்,தவில் போன்ற கலைகளை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனை எதிர்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் பாரம்பரிய கலைகள் அழியாமல் இருக்கும்’ என்றார். 

தொடர்ந்து மீடூ விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,  ‘மீடூ  விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்கள் அவர்கள் இதுவரை அமைக்கவில்லை. அரசிடம் இருந்து சரியான பதிலும் இல்லை. பாதிக்கப்பட்ட பல பேர் வழக்குப் பதிவு செய்தும் இன்னும் நடவடிக்கை இல்லை. சட்டம் எங்களைக் கைவிட்ட ஒரு நிலைமை தான் இருக்கிறது. அதே நேரத்தில் டப்பிங் யூனியனில் நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.