மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலி; பெங்களூருவில் சோகம்!!

 

மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலி; பெங்களூருவில் சோகம்!!

மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் பலியான சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு: மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் பலியான சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்துக்கு அருகே பன்ட்லகுடா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் விளையாட்டுத் தனத்தோடு மின்கம்பத்தை பிடித்த போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். மின்கம்பத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரன் என கூறப்பட்டது.

அந்த சோக சம்பவத்தின் வடு ஆறாத நிலையில், பெங்களூருவில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் ஒருவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் பனஸ்வாடி பகுதியில் டாக்டர்.ராஜ்குமார் பூங்காவில் உதய் கார் எனும் எழு வயது சிறுவன், தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாரா விதமாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த வயரை அச்சிறுவன் மிதிக்கவே, மின்சாரம் பாய்ந்து அச்சிறுவன் சரிந்து விழுந்துள்ளான். தனது அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று புரியாமல் அவனை காப்பாற்ற போன ஐந்து வயது தம்பியையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், உதய் கார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த அவனது தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், பூங்காவில் உள்ள பழைய மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை சில தினங்களுக்கு முன்னர் பொருத்தியுள்ளனர். அப்போது, வயர்களை மாற்றும் போது, ஊழியர்கள் அதனை அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால், மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த வயரை சிறுவன் மிதித்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனிடைய, இச்சம்பவம் குறித்து பெயரிடப்படாத பெங்களூர் வளர்ச்சி வாரியம், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.