மின்இணைப்பு துண்டிக்கபடாது… முடிதிருத்துபவர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.5 ஆயிரம் உதவி தொகை…. ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம்….. இதெல்லாம் போதாது என பொங்கும் கர்நாடக காங்கிரஸ்

 

மின்இணைப்பு துண்டிக்கபடாது… முடிதிருத்துபவர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.5 ஆயிரம் உதவி தொகை…. ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம்….. இதெல்லாம் போதாது என பொங்கும் கர்நாடக காங்கிரஸ்

கர்நாடகாவில் லாக்டவுனால் பாதிக்கப்பட்ட முடிதிருத்துபவர்கள், டிரைவர்கள் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஒரு முறை இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதெல்லாம் போதாது என காங்கிரஸ் மாநில அரசின் பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை குறை கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இம்மாதம் 17ம் தேதி வரை மொத்தம் 54 நாட்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த லாக்டவுனால் அனைத்து தரப்பினரும் நெருக்கடியை சந்தித்தனர். இருப்பினும், முடிதிருத்துபவர்கள், சலவை தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்கள் மற்றவர்களை காட்டிலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

இந்நிலையில் கர்நாடகாவில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ.1,610 கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்புகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா நேற்று செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது: அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் வரை ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

விவசாயி

60 ஆயிரம் சலவை தொழிலாளர்கள், 2.30 லட்சம் முடிதிருத்துபவர்கள் மற்றும் மொத்தம் 7.75 லட்சம் ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு ஒரு முறை உதவி தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 54 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு முறை உதவி தொகையாக தலா ரூ.2 ஆயிரம் அரசு கொடுக்கும். 15.8 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கும் ஒரு முறை நடவடிக்கையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சித்தராமையா

அனைத்து வகையான மின்சார நுகர்வோர் சரியான நேரத்தில் மின்சார கட்டணத்தை செலுத்தினால் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படும். கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு ஜூன் இறுதி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படாது. லாக்டவுனால் பெரும் உற்பத்தி இழப்பை சந்தித்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மாதந்திர நிலையான கட்டணங்கள் இரண்டு மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம், இந்த பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போதாது. விவசாயிகள் அனுபவிக்கும் இழப்பில் குறைந்தபட்சம் பாதியாவது இழப்பீடாக வழங்க வேண்டும்  என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா குறை கூறினார்.