மாஸ் காட்டிய விஜய்… ஆளுங்கட்சி கெடுபிடி! டிக்கெட்டுகளை கிழித்த ரசிகர்கள்!

 

மாஸ் காட்டிய விஜய்… ஆளுங்கட்சி கெடுபிடி! டிக்கெட்டுகளை கிழித்த ரசிகர்கள்!

ஒவ்வொரு பட ரிலீஸ் சமயத்திலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செண்டிமெண்ட் காரணமாக சர்கார் படத்தின் இசை வெளியீடு நடைப்பெற்ற, தாம்பரம் அருகே இருக்கும் அதே தனியார் கல்லூரியில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஒவ்வொரு பட ரிலீஸ் சமயத்திலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செண்டிமெண்ட் காரணமாக சர்கார் படத்தின் இசை வெளியீடு நடைப்பெற்ற, தாம்பரம் அருகே இருக்கும் அதே தனியார் கல்லூரியில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால், இம்முறை விடுமுறை தினமாக இல்லாமல், கல்லூரி வேலை நாட்களில் இசை வெளியீடு நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். விஜய் ரசிகர்கள் ஒருபுறம், கல்லூரி மாணவர்கள் மற்றொரு புறம் என்று பிகில் படத்தின் இசை வெளியீடு விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பாகவே குவிந்தனர்.  

vijay

நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை காண சென்னை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், வாகனங்களில் குவிந்தனர். இதன் காரணமாக தாம்பரம் முதல் சோமங்கலம் வரை சுமார் 7 கி.மீ தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது.  ஒரே நேரத்தில் இத்தனைப் பேர் திரண்டு வந்ததால் கல்லூரியைச் சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒருபுறம் விழாவிற்கு அனுமதி டிக்கெட் வழங்குவதில் குளறுபடி செய்ய, இன்னொரு புறம் ஆளுங்கட்சியை படத்திற்கு படம் பகைத்துக் கொள்ளும் விஜய்யை கட்டம் கட்டி, போலீசாரும் விஜய் ரசிகர்களை உள்ளே விடாமல் அலைக்கழித்து வந்தனர். குறிப்பாக ரசிகர் மன்றத்திற்கு வழங்கப்பட்ட டிக்கெட்களை வைத்திருந்தவர்களை ஏக கெடுப்பிடி செய்து, உரிய அனுமதி டிக்கெட் வைத்திருந்தும் போலீசார் ரசிகர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நிகழ்ச்சி ஆரம்பமாகி, எல்லோரும் விழாவில் மூழ்கியிருந்ததால், கல்லூரிக்கு வெளியே நடந்த கலவரங்களை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. தங்கள் அபிமான நடிகரின் பேச்சைக் கேட்கப் பல கி.மீ தூரத்தில் இருந்து பயணப்பட்டு வந்திருந்த ரசிகர்கள், உரிய டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். ஒரு கட்டத்தில் போலீசாரையும் மீறி அரங்கத்திற்குள் செல்ல முயன்ற ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதில் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டது. 

bigil audio launch

இத்தனைக் கூட்டத்திற்கான காரணத்தை விசாரித்தால், பத்தாயிரம் இருக்கைகள் கொண்ட வசதியை மட்டுமே கொண்டுள்ளது அந்த குறிப்பிட்ட தனியார் கல்லூரி அரங்கம். ஆனால், ரசிகர்கள் அனைவரையும் திருப்தி படுத்துவதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமார் இருபதாயிரம் டிக்கெட்டுகள் வரையில் அச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். ஏக கெடுபிடி செய்து, டிக்கெட்களை பரிசோதித்து அனுப்பிய போலீசார், அரங்கம் நிறைவடைந்ததும் அனுமதி தர மறுத்திருப்பதாக கூறினார்கள். ரசிகர்களின் தரப்பிலோ, எங்கள் தலைவர் ஆளுங்கட்சியை படங்களில் விமர்சித்து வருவதால், வேண்டுமென்றே ரசிகர்களைக் குறி வைத்து போலீசார் தாக்குகிறார்கள்.  விஜய்யை ஒரு முறை நேரில் பார்த்தாலே போதும் என அத்தனை ஆசையோடு பல கி.மீ. தூரம் கடந்து வந்திருந்தோம். குறிப்பிட்ட மணிக்குள் அரங்கத்திற்குள் இருக்கச் சொன்னதால், பல மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்தோம். இப்போது போலீசிடம் அடிவாங்கி கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். இந்த சம்பவம் எங்கள் தளபதி விஜய்யின் கவனத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறி டிக்கெட்டுகளை எல்லாம் கல்லூரி வாசலில் கிழித்துப் போட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.