மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

 

மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனிடையே, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 17-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 

இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களில் சிலர் எம்எல்ஏ-க்களாகவும் உள்ளனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது, தேர்தல் நிதி திரட்டுவது மற்றும் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அதேசமயம், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்படட் 18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. எனவே, தீர்ப்பையடுத்து திமுக-வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.