மார்கழி திருவாதிரை விரதத்தின் மேன்மைகள்

 

மார்கழி திருவாதிரை விரதத்தின் மேன்மைகள்

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரை விரதம் இருந்து ஆருத்ரா தரிசனம் செய்வது பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும்.

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, நட்சத்திரங்களில் நான் திருவாதிரை என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். 

aruthra

திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் தில்லை சிதம்பரத்தில் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றது.

பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார்.

aruthra

அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். 

அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும்.களி என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்

அன்று முழுவதும் இறைவனை பற்றிய சிந்தனையோடு மூழ்கி சிவபுராணம் போன்ற பக்திப்பாடல்களையும் பாடலாம். ஒரு வேளை உணவுண்டு, பால், பழம் அருந்தி தெய்வத்திற்காக தம் மனம், மொழி, செயல்களை அர்ப்பணம் செய்ய வேண்டும்.

aruthra

சிவன் அடியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது.