மாநில அரசுகளின் கண்காணிப்பு போதுமானதாக இல்லை! – மத்திய அரசு அதிருப்தி

 

மாநில அரசுகளின் கண்காணிப்பு போதுமானதாக இல்லை! – மத்திய அரசு அதிருப்தி

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், மாநில அரசுகளின் கண்காணிப்பு போதுமானதாக இல்லை என்று மத்திய அமைச்சரவை செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை செயலாளராக உள்ள ராஜீவ் கவுபா மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கடந்த ஜனவரி 18 முதல் மார்ச் 23 வரையிலான காலகட்டத்தில் 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று இருந்திருக்க வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரி 18ம் தேதியிலிருந்துதான் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு அடிப்படை பரிசோதனைகள் தொடங்கப்பட்டன. இதன் அடிப்படையில் சுங்கத் துறை 15 லட்சம் பேர் இந்தியாவுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

corona-checking-airport

அரசு கொரோனா பாதிப்பு வரக்கூடிய ஆபத்து என்று கண்காணிக்கும் மக்களுக்கும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்க, வெளிநாட்டிலிருந்து வந்த ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்திக் கண்காணிப்பது அவசியமாகிறது. எனவே, மாநில அரசுகள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.