மாநிலத்துக்குள் நுழைவதற்கு முன் மக்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை கட்டாயம்… இமாச்சல பிரதேச முதல்வர் உத்தரவு

 

மாநிலத்துக்குள் நுழைவதற்கு முன் மக்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை கட்டாயம்… இமாச்சல பிரதேச முதல்வர் உத்தரவு

இமாச்சல பிரதேசத்துக்குள் நுழைவதற்கு முன் மக்களுக்கு கட்டாயம் முழு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அம்மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 என்ற அளவில்தான் உள்ளது. இதில் கொரோனாவிலிருந்து மீண்ட 22 பேரும், கொரோனாவால் உயிர் இழந்த ஒருவரும் அடங்குவர். 

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

வெளிமாநிலங்களிலிருந்து இமாச்சல பிரதேசத்துக்கு வருபவர்களால் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக, அம்மாநிலத்துக்குள் நுழைவதற்கு முன் மக்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயம் என அம்மாநில முதல்வர்  உத்தரவிட்டுள்ளார். இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் நேற்று அம்மாநில துணை ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தொடர்பாக கலந்துரையாடினார். அப்போது, மாநிலத்துக்குள் மக்கள் நுழைவதற்கு முன் அவர்களுக்கு முழு பரிசோதனை செய்வது கட்டாயம். முழு பரிசோதனை நடப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். 

மருத்துவ பரிசோதனை

மேலும் அவர் கூறுகையில், மாநிலத்துக்குள் நுழையும் மக்கள்  தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் டவுன்லோட் செய்யவேண்டும். பாஸ்கள் வழங்கும் வழிமுறையை சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்கள் சீராக மேற்கொள்ள வேண்டும் இதனால் மாநிலத்தின் நுழைவு பகுதியில் கூட்டநெரிசலை தவிர்க்கலாம். முக கவசம் மற்றும் முக கவர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் என்பதால் அவற்றை அணிய மக்களை ஊக்குவிக்க வேண்டும். சில பகுதிகளில் குறிப்பிட்ட கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் அங்கு பயனுள்ள சமூக விலகலை பராமரிப்பது அவசியம் மற்றும் ஒவ்வொருவரும் முக கவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என  தெரிவித்தார்.