மாதந்தோறும் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1.10 லட்சம் கோடி வரணும்….. அதுக்கு என்ன செய்யனுமோ செய்யுங்க… வரி அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…

 

மாதந்தோறும் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1.10 லட்சம் கோடி வரணும்….. அதுக்கு என்ன செய்யனுமோ செய்யுங்க… வரி அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…

வரும் மாதங்களில் ஜி.எஸ்.டி. வாயிலான சராசரி வருவாய் ரூ.1.10 லட்சம் கோடி வரணும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வரி அதிகாரிகளுக்கு மத்திய வருவாய் துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜி.எஸ்.டி. வாயிலாக மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில், பொருளாதார மந்த நிலையால் சமீப காலமாக ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் குறைந்து வருகிறது. மேலும், பல பொருட்களின் வரியை குறைத்ததும் வருவாய் குறைந்தற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்ததால் மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வசூல்

இந்த சூழ்நிலையில், இந்த மாதம் முதல் மார்ச் வரையிலான 4 மாத காலத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக மாதந்தோறும் ரூ.1.10 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷன், வரி அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்தில், வரும் மார்ச் வரையிலான 4 மாத காலத்தில் ஜி.எஸ்.டி வாயிலாக மாதந்தோறும் ரூ.1.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், குறைந்தபட்சம் ஒரு மாதம் ரூ.1.25 லட்சம் கோடி வசூல் இலக்கை எட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இலக்கை எட்ட வரி அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி வருவாய் துறை செயலாளர் அறிவுறுத்தியதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜி.எஸ்.டி.

கடந்த 8 மாதங்களில் ஜி.எஸ்.டி வசூல் நான்கு முறை ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. அதிலும் ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.10 லட்சம் கோடியை தாண்டியது. 4 முறை ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே ஜி.எஸ்.டி. வசூலாகி இருந்தது. தற்போதைய வேகத்தில் ஜி.எஸ்.டி. வசூல் இருந்தால் இந்த நிதியாண்டில் இலக்கை காட்டிலும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.