மாணவிகள், ஆசிரியைகளுக்கு கல்லூரி நிறுவனர் பாலியல் தொந்தரவு; அதிர்ச்சி தகவல்!

 

மாணவிகள், ஆசிரியைகளுக்கு கல்லூரி நிறுவனர் பாலியல் தொந்தரவு; அதிர்ச்சி தகவல்!

கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்

நாகர்கோவில்: கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தில் ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் நிறுவனர் ரவி (35). இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும், ஆசிரியைகளிகும் கல்லூரி நிறுவனர் பாலியல் தொல்லை தருவாதாக புகார் எழுந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என கல்லூரியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியைகளால் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரவியின் அறைக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சென்ற ஆசிரியை ஒருவர் அழுது கொண்டே வெளியே ஓடி வந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியையிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு ஆசிரியை அழுதபடியே, ரவி தனக்கு அவ்வப்போது பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்ததாகவும்,  இன்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய அவர் முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் தனது பெற்றோர் மற்றும் மாணவிகளின் துணையோடு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அந்த ஆசிரியை இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில், கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு நிறுவனர் ரவி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் கேமராக்கள் பொருத்தி மாணவிகள் கண்காணிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இக்கல்லூரியில் வேலை பார்த்த ஆசிரியைகள் பலர் கல்லூரி நிறுவனர் ரவி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக வேலையை விட்டுச் சென்று விட்டதாகவும், அவரது ஆசைக்கு இணங்க மறுத்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை கல்லூரியில் இருந்து நீக்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ரவிக்கு உடந்தையாக பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் செயல்பட்டதும், மாணவிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி அவர்களை ரவயின் பாலியல் இச்சைக்கு இணங்க அவர்கள் வற்புறுத்தியதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த ஏற்கனவே எழுந்த புகார்களின் போதெல்லாம் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என இந்த ஆசிரியைகள் மூலம் ரவி சமாளித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கல்லூரி நிறுவனர் ரவி, பேராசிரியைகள் நளினி, கலா ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506 (2), 354 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், ரவியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தால் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.