மாணவன் மணிகண்டன் டிஸ்மிஸ்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

 

மாணவன் மணிகண்டன் டிஸ்மிஸ்:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

என்னை போன்றவர்கள் அரசியலில் பங்கு பெற்று வளர்வதற்கு கல்லூரி ஆசிரியர்கள்தான், களம் அமைத்து தந்தார்கள்.

சென்னை :  அரசுக்கு எதிராக  போராட்டங்கள் நடத்திய மாணவர் மணிகண்டனை கல்லூரியை விட்டு நீக்கியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனம் ஆண்கள் அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவர் மணிகண்டன். இளங்கலை ஆங்கிலத்துறையில் மூன்றாமாண்டு படித்து இவர் அரசியல், சமூக செயல்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். இவர் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிக்காகவும், தேசிய கல்வி கொள்கை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, அம்பேத்கர் சிலை உடைப்பு, 5, 8 பொதுத் தேர்வு உள்ளிட்ட அரசியல் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. இதனால் அவரை கல்லூரி நிர்வாகம் மாணவன் மணிகண்டனை டிஸ்மிஸ் செய்துள்ளது.

mahenthiran

இந்நிலையில் இதற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நந்தனம் கல்லூரி பேராசிரியர்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி. என்னை போன்றவர்கள் அரசியலில் பங்கு பெற்று வளர்வதற்கு கல்லூரி ஆசிரியர்கள்தான், களம் அமைத்து தந்தார்கள். இப்பொழுதும் நன்றியுடன் அவர்களை நினைவு கூறுகிறேன்.

 

அதே கல்லூரி ஆசிரிய பெருமக்கள் தான் நந்தனம் கல்லூரியில் ஒன்றுகூடி மணிகண்டன் என்கின்ற ஏழை மாணவனை டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை, நீட் முதலான அரசின் கொள்கைகளை எதிர்த்து கல்லூரி வளாகத்தில் போராடினான் என்பதுதான் அவன்மீது வைக்கப்பட்டிருக்கிற குற்றச்சாட்டு. இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். படிப்பை முடிப்பதற்கு ஐந்து மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் இந்த தண்டனை ஏன் என்ற கேள்விக்கு இனிய பெருமக்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.