மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபரீதம்: பெண் மருத்துவர் பரிதாப பலி!

 

மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபரீதம்:  பெண் மருத்துவர் பரிதாப பலி!

மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு  உயிருக்குப் போராடிய மருத்துவர்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு  உயிருக்குப் போராடிய மருத்துவர்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் மருத்துவர் ருபாலி நிகம். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது பட்டம் விடப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்த ருபாலி ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். அவரைக்கண்ட சித்தார்த் என்பவர் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றார். ஆனால் அதிக ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ருபாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இது குறித்து பேசிய சித்தார்த், ‘நான் பார்த்த போது அவர் இரு சக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். நான் உதவி செய்ய ஓடினேன். அவரது கழுத்துப்பகுதியை மாஞ்சாக்கயிறு ஆழமாக அறுத்திருந்தது. அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவரைக் காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. நான் 20 நிமிடங்கள் வரை வாகனத்துக்காகக் காத்திருந்தேன். அதற்கு பிறகே அவரை மருத்துமனைக்கு தூக்கிச்சென்றோம். முன்னதாகவே அவர் மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பாகி இருக்கும்’ என்று தெரிவித்தார்

இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ‘ மற்றவர்களின் பட்டத்தை அறுப்பதற்காகக் கண்ணாடிகளை நொறுக்கி ஒட்டப்பட்ட மாஞ்சா நூலைப் பயன்படுத்துகின்றனர். கடந்த வருடம் டெல்லியில் 2 நாட்களில் 3 பேர் மாஞ்சா இழையால் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்தனர். அதற்குப் பின்னர் அங்கு மாஞ்சா நூல் தடை செய்யப்பட்டது. மாஞ்சா நூல் மிகவும் ஆபத்தானது என்பதைச் சிறுவர்களும், இளைஞர்களும் உணர வேண்டும்’ என்று தெரிவித்தார்.