மவுனம் கலைந்தது! முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மற்றும் அரசுகளை போட்டு தாக்கிய உர்ஜித் படேல்

 

மவுனம் கலைந்தது! முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மற்றும் அரசுகளை போட்டு தாக்கிய உர்ஜித் படேல்

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்கு முக்கிய காரணமே, தனக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்களும், முந்தைய மத்திய அரசுகளும்தான் என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து 24வது புதிய கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்றார். 2016 செப்டம்பரில் உர்ஜித் படேல் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த மாதம்தான் மத்திய அரசு ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

ஆர்.பி.ஐ.

உர்ஜித் படேலின் பதவிக்காலம் 2019 செப்டம்பர் வரை இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். நிதி அமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட உரசல்தான் அவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் தனது உடல் நலத்தை கருதி பதவி விலகுவதாக கூறினார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியிலிருந்து விலகிய பிறகு உர்ஜித் படேல் வழக்கம் போலவே அமைதியாகவே இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி ஒரு கருத்தரங்கில் உர்ஜித் படேல் கலந்து கொண்டு பேசி இருந்தார். தற்போது அவர்  பேசியது தொடர்பான அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்கு தனக்கு முன்னாள் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர்களும், முந்தைய மத்திய அரசுகளும்தான் காரணம்.

வங்கிகள் நிலவரம்

வாராக் கடனை குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், முந்தைய அரசுகள் பொருளாதாரத்தை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை பயன்படுத்தின. அதேசமயம் சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை. பொதுத்துறை வங்கிகளை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு என்ற இரட்டை தலைமையால் பலன் கிடைக்காது என்பது உள்பட பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.