மயானத்தில் 4 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை: மொத்த குடும்பமும் உடந்தையாக இருந்த கொடூரம்!

 

மயானத்தில் 4 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை: மொத்த குடும்பமும் உடந்தையாக இருந்த கொடூரம்!

சில தினங்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போன நிலையில் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

தேனி: 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட  வழக்கில் பெற்ற  தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு  முருகனும் கீதாவும் பிரிந்து வேறுவேறு நபர்களைக்  திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தனர். குழந்தை ஹரிஷ் மட்டும் கீதாவின் தாய் வீட்டில் வளர்ந்து வந்தான். இதனால் அவன் அடிக்கடி முருகன் மற்றும் கீதா வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளான். 

murder

இந்நிலையில் சிறுவன் ஹரிஷ்  சில தினங்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போன நிலையில் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கோம்பை காவல்நிலையத்தில்  உறவினர்கள்  புகார் கொடுத்தனர். இதையடுத்து  கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மயானம் ஒன்றில் ஹரிஷ் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

murder

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  ‘இறந்த சிறுவன் ஹரிஷின்  பெற்றோர் பிரிந்த நிலையில் தாய் கீதா உதயன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மகன் ஹரிஷ் , தனக்கும் உதயனுக்கும் இடையூறாக  இருப்பதாகத் தனது தங்கை புவனேஷ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் ஹரிஷை தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டிய அவர்கள் புவனேஷ்வரியின் கணவன் கார்த்திக்கின் உதவியுடன்  சிறுவன் ஹரீஷை மயானத்திற்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றுள்ளது’ தெரியவந்துள்ளது. 

குழந்தை ஹரிஷை கொல்லும்  போது, மயானத்தில் யாரேனும் வருகிறார்களா? என்று புவனேஸ்வரி கண்காணித்துள்ளார்.  இதையடுத்து இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து கார்த்திக், புவனேஸ்வரி, கீதா மற்றும் உதயன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.