மம்தா பானர்ஜியால்தான் பிரதமராக முடியும்: பாஜக மாநில தலைவர் அதிரடி

 

மம்தா பானர்ஜியால்தான் பிரதமராக முடியும்: பாஜக மாநில தலைவர் அதிரடி

மேற்கு வங்க மாநிலத்தவர் ஒருவர் பிரதமர் ஆக முடியுமென்றால் அது மம்தா பானர்ஜியால்தான் முடியும் என அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார்.

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தவர் ஒருவர் பிரதமர் ஆக முடியுமென்றால் அது மம்தா பானர்ஜியால்தான் முடியும் என அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்திய அளவில் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்திருக்கின்றன. இதில் முதன்மையாக இருப்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. தொடர்ந்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் அவர் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றியே தீர வேண்டும் என பணியாற்றி வருகிறார். இதனால் பாஜகவுக்கு மம்தா சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறிய வாழ்த்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது. நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெறவும் அவருக்கு வாய்ப்புள்ளது.

அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பதால்தான் சிறப்பாக பணியாற்றுகிறார். பெங்காலி ஒருவர் பிரதமாக முடியும் என்றால் அந்த பட்டியலில் மம்தா பானர்ஜிதான் முதலிடத்தில் இருப்பார். மம்தாவின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளது. ஜோதி பாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை. முதல் பெங்காலி ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். அதனால் இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான நேரம் என்றார். அவரது இந்த பேச்சு பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.