மம்தாவுக்கு கடிதம் எழுதிய அமித் ஷா… புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச சரத் பவார் வேண்டுகோள்…

 

மம்தாவுக்கு கடிதம் எழுதிய அமித் ஷா… புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச சரத் பவார் வேண்டுகோள்…

புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கா மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், மேற்கு வங்கத்தில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்க அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எதிர்பார்தத அளவிலான ஆதரவு கிடைக்கவில்லை. ரயில்வே இயக்கும் ஷ்ராமிக் ரயில்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும் என தெரிவித்து இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்த சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டிவிட்டரில், எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிடாமல், புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி மறுக்கும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பேசுவதன்  மூலம் இந்த விஷயத்தில் தலையிட நமது பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர் தொடர்ச்சியான டிவிட்டுகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் பேசினேன்.

சரத் பவார்

தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி செல்வதற்கான மாநில போக்குவரத்து பஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்படும் என உத்தவ் தாக்கரேவும், தொழிலாளர்கள் திரும்பி செல்ல ரயில்களும் ஏற்பாடு செய்யப்படும் என பியூஸ் கோயலும் என்னிடம் உறுதி அளித்தனர் என பதிவு செய்து இருந்தார்.