மனோகர் பாரிக்கர் பதவி விலக வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் பேரணி

 

மனோகர் பாரிக்கர் பதவி விலக வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் பேரணி

கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் பதவி விலக வலியுறுத்தி அவரது வீட்டை நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்

பனாஜி: கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் பதவி விலக வலியுறுத்தி அவரது வீட்டை நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெருமான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடத்தில் வெற்றி பெறவில்லை. அதேசமயம், இரண்டாவது இடம் பிடித்த பாஜக, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. கோவா முதல்வராக அக்கட்சியின் மனோகர் பாரிக்கர் உள்ளார்.

இதனிடையே, முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடு சென்று சிகிச்சை பெற்ற அவர், தாயகம் திரும்பியும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதேசமயம், சுமார் 9 மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனோகர் பாரிக்கர் அரசு நிர்வாகத்தை கவனிக்காமல் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், அங்கு குழப்பமான சூழல் உள்ளது.

இந்நிலையில், கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் அடுத்த 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது இல்லத்தை நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். மனோகர் பரிக்கர் பதவி விலக வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக முழு நேர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய பதாகைகளை பேரணியாக சென்றவர்கள் கையில் ஏந்தி சென்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து இருந்த இந்த பேரணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

பேரணி சென்றவர்களை பரிக்கர் வீட்டின் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து தொடர்ந்து அவர்கள் முலகமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் மனோகர் பாரிக்கர் பதவி விலகாவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.