மத்திய மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்: முத்தரசன் அறிவிப்பு

 

மத்திய மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்: முத்தரசன் அறிவிப்பு

கஜா புயல் நிவாரண பணிகளை போர்க்கால வேகத்தில் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 18.12.2018 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

சென்னை: கஜா புயல் நிவாரண பணிகளை போர்க்கால வேகத்தில் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 18.12.2018 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் தாக்கி, ஒரு மாத காலமாகிவிட்டது. இயல்புநிலை இன்று வரை திரும்பவில்லை. நகரப் பகுதி உட்பட கிராமங்களுக்கும் முழுமையான மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கோரிய ரூ 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு இதுநாள் வரை ஏற்கவில்லை. மாநில அரசு புயல் சேதம் குறித்து முழுவிபர அறிக்கையை அளித்துவிட்டதாக கூறுகின்றது. மத்திய அரசு, கோரிய விபரங்களை தமிழ்நாடு அரசு அனுப்பாத காரணத்தால் தான் நாங்கள் நிதி அளிக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கின்றது.

இரு அரசுகளும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லியவாறு நாட்களை கடத்துகின்றன. மக்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. மாநில அரசு அறிவித்த நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. அவநம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக விவசாயிகள் அதிர்ச்சி மரணத்திற்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், தமிழ்நாடு அரசு கோரிய ரூ 15 லட்சம் நிதியை மத்திய அரசு வழங்கிடக் கோரியும், நிவாரணத் தொகைகளை அதிகரிப்பதுடன் அதனை உடனடியாக வழங்கிடக் கோரியும் மக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே சாலை மறியல், ஆர்ப்பாட்டம், மறியல் என போராடிக் கொண்டிருக் கின்றார்கள். அரசு மக்களின் பாதிப்பு குறித்தோ, அவர்களின் உணர்வுகள் குறித்தோ சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக போராடும் மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதிலும், கைது செய்து சிறையில் அடைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த அடக்குமுறை செயலை வன்மையாக் கண்டிக்கிறோம்.

நிவாரணப் பணிகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வலியுறுத்தி 18.12.2018 செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பொது இடங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் இப்போராட்டம் நடைபெறும். காவல்துறை அனுமதி மறுத்தால், அதனை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.               

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர். இரா.முத்தரசன், துணைச் செயலாளர் கே.சுப்பராயன் முன்னாள் எம்.பி, மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ, தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.குணசேகன் முன்னாள் எம்.எல்.ஏ, பொதுச் செயலாளர் டாக்டர்.வே.துரைமாணிக்கம், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ, மற்றும் மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் வை.சிவபுண்ணியம் முன்னாள் எம்.எல்.ஏ, தஞ்சாவூர் வழக்கறிஞர் மு.அ.பாரதி, புதுக்கோட்டை மு.மாதவன், நாகப்பட்டினம் அ.சீனிவாசன் உட்பட மாநில, மாவட்ட தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

அரசு இனியும் காலம் தாழ்த்தாது அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியளவை மறுபரிசீலனை செய்து, மறுவாழ்வைத் தொடங்க உதவும் வகையில் உடனடியாக உதவிட வேண்டுகிறோம். மத்திய, மாநில அரசுகளின் செயலற்ற தன்மையை கண்டித்தும், போர்க்கால வேகத்தில் செயல்பட வற்புறுத்தியும் நடைபெறும் இம்மகத்தான உண்ணாநிலை போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்து பங்கேற்க வேண்டுகிறோம் என கூறியுள்ளார்.