மத்திய பிரதேச மக்களை ஏமாற்றிய புரோக்கர்களில் கமல் நாத் அரசும் ஒன்று… சிவராஜ் சிங் சவுகான் ஆவேசம்….

 

மத்திய பிரதேச மக்களை ஏமாற்றிய புரோக்கர்களில் கமல் நாத் அரசும் ஒன்று… சிவராஜ் சிங் சவுகான்  ஆவேசம்….

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும். மத்திய பிரதேச மக்களை ஏமாற்றிய புரோக்கர்களில் கமல் நாத் அரசும் ஒன்று என பா.ஜ.க. தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆளும் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் கோரானா வைரஸை காரணம் காட்டி சட்டப்பேரவையை 26ம் தேதி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

முதல்வர் கமல் நாத்

இதனையடுத்து, அடுத்த 12 மணி நேரத்துக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல் நாத் அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க.வின் தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான சிவ்ராஜ் சிங் சவுகான் வரவேற்றுள்ளார்.

பா.ஜ.க.

இது குறித்து சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த அரசாங்கம் பெரும்பான்மை இழந்த அரசாங்கம் மட்டுமல்ல, மத்திய பிரதேச மக்களை ஏமாற்றிய புரோக்கர்களில் இதுவும் ஒன்று. இந்த அரசாங்கம் நாளை (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவும். பா.ஜ.க. பெரும்பான்மையை நிருபிக்கும் என தெரிவித்தார்.