மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்டி புரளும் தலைவர்கள்.. சந்திக்க உத்தரவிட்ட சோனியா…

 

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்டி புரளும் தலைவர்கள்.. சந்திக்க உத்தரவிட்ட சோனியா…

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவிக்காக, கட்சி தலைவர்களுக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து, தன்னை சந்திக்க வருமாறு கமல்நாத் மற்றும் சிந்தியாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரசின் இந்த வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் அந்த கட்சியின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இருந்தார். இதனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என அவர் நினைத்தார். ஆனால் கட்சி மேலிடம் அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத்தை முதல்வராக்கியது. இதனால் கடுப்பாகி போனார் சிந்தியா.

ஜோதிராதித்ய சிந்தியா

சரி முதல்வர் பதவிதான் கிடைக்கவில்லை மாநில கட்சி தலைவர் பதவியாவது வேண்டும் என சிந்தியா உறுதியாக இருக்கிறார். ஆனால் அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் அதற்கு எதிர்ப்பாக உள்ளார். மேலும், அண்மையில் கமல்நாத் டெல்லி சென்று மாநில காங்கிரசுக்கு புதிய தலைமை நியமிக்கும்படியும், பழங்குடி இனத்தவரை நியமித்தால் கட்சிக்கு நல்லது என்றும் யோசனை கூறிவிட்டு வந்து விட்டார். கமல் நாத்தும் சிந்தியா மாநில தலைவராக வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார் அதனால்தான் பழங்குடி இனத்தவரை மாநில கட்சி தலைவராக நியமித்தால் நல்லது என்று தலைமையிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

கமல் நாத்

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தலைவர்கள் இடையே மோதல் உச்ச கட்டத்தை நெருங்குவதை பார்த்த அந்த கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி, கமல்நாத் மற்றும் சிந்தியாவையும் தன்னை சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். முதலில் சிந்தியா நாளை சோனியாவை சந்தித்து முதலில் பேசுவார் என்றும் அதற்கடுத்த நாள் கமல் நாத் சந்தித்து பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பொருத்தமான நபர் குறித்து அவர்கள் இருவரிடமும் சோனியா காந்தி விவாதிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.