மத்திய பிரதேச காங்கிரசில் தலைவர்கள் அடி புடி… இதுக்கும் பா.ஜ.தான் காரணமாம்…

 

மத்திய பிரதேச காங்கிரசில் தலைவர்கள் அடி புடி… இதுக்கும் பா.ஜ.தான் காரணமாம்…

மத்திய பிரதேச காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. கட்சிக்கும், அரசுக்கும் கெட்டப்பெயர் உருவாக்கும் நோக்கில் பிரிவினைவாத, அவதூறு செய்திகளை பா.ஜ. பரப்பி வருவதாக அம்மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றியில் காங்கிரசின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பங்களிப்பு மிகுதியானது. தனக்கு முதல்வர் பதவியை கிடைக்கும் என சிந்தியா நினைத்து இருந்தார். ஆனால் முதல்வர் பதவியை கமல்நாத்துக்கு கட்சி மேலிடம் கொடுத்தது. 

கமல் நாத்

இதனால் கடுப்பில் உள்ள சிந்தியா, முதல்வர் பதவிதான் கிடைக்கவில்லை கட்சியின் மாநில தலைவர் பதவியாவது கட்டாயம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சிந்தியாவின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு அவரை மாநில காங்கிரஸ் தலைவராக ஆக்கும்படி போஸ்டர் அடித்து ஒட்டினர். இது ஒரு புறம் இருக்க திக்விஜய சிங்கின் ஆதரவாளர்கள் அம்மாநில அமைச்சர் உமாங் சிங்ஹாரின் உருவபடத்தை பல பகுதிகளில் எரித்தனர். 

ஜோதிராதித்ய சிந்தியா

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநில முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் மாநிலத்துக்கு புதிய தலைவரை நியமிக்கும்படி மேலிடத்தில் சமீபத்தில் தெரிவித்தார். மேலும், சிந்தியா மாநில தலைவர் பதவிக்கு வராதவாறு பழங்குடி இனத்தவரை தலைவராக நியமித்தால் கட்சிக்கு நல்லது என்று ஆப்பும் வைத்து விட்டார். ஆக, மத்திய பிரதேச காங்கிரசில், சிந்தியா, திக்விஜய சிங் மற்றும் கமல்நாத் என மூன்று முகாம்களுக்கு இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது.

திக்விஜய சிங்

ஆனால் இது எல்லாம் பா.ஜ.வின் பொய் பிரசாரம் என கூறுகிறது காங்கிரஸ். இது தொடர்பாக அம்மாநில தலைமை செய்தி தொடர்பாளர் சோபா ஓசா கூறுகையில், மத்திய பிரதேச காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. கட்சிக்கும், அரசுக்கும் கெட்டப்பெயர் உருவாக்கும் நோக்கில் பிரிவினைவாத மற்றும் அவதூறு செய்திகளை பா.ஜ. பரப்பி வருகிறது என தெரிவித்தார்.