மத்திய பிரதேசத்தில் கமல் நாத்தை அரசை கவிழ்த்த 22 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் ஐக்கியம்…

 

மத்திய பிரதேசத்தில் கமல் நாத்தை அரசை கவிழ்த்த 22 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் ஐக்கியம்…

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ காரணமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

மத்திய பிரதேசத்தில் 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. மத்திய பிரசேதத்தில் காங்கிரஸ் வெற்றி முக்கிய காரணகர்த்தவாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இதனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் கமல் நாத்துக்கு முதல்வர் பதவியை கொடுத்தது. இது சிந்தியாவுக்கு மன வருத்தத்தை கொடுத்தது. சரி மாநில கட்சி தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு அது கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டார்.

முன்னாள் முதல்வர் கமல் நாத்

இதனையடுத்து முதல்வர் கமல் நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது. ஒரு கட்டத்தில் சிந்தியா ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினார். இந்நிலையில் அண்மையில் யாரும் எதிர்பாராத வண்ணம் சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். சிந்தியாவுக்கு ஆதரவான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்தது. மேலும் மார்ச் 20ம் தேதி (கடந்த வெள்ளிக்கிழமையன்று) மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கமல் நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

பா.ஜ.க.வில் இணைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

22 எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே முதல்வர் கமல் நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், கமல் நாத் அரசை கவிழ்த்த 22 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் நேற்று பா.ஜ.க.தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தனர். அப்போது, ஜோதிராதித்ய சிந்தியா, நரேந்திர தோமர் மற்றும் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோரும் இருந்தனர்.