மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதி வழக்கம் போல் பங்கு வர்த்தகம் நடைபெறும்

 

மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதி வழக்கம் போல் பங்கு வர்த்தகம் நடைபெறும்

அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு அன்று (சனிக்கிழமை) பங்கு வர்த்தகம் வழக்கம் போல் நடைபெறும் என மும்பை பங்கு சந்தை அறிவித்துள்ளது.

பங்குச் சந்தைகளுக்கு பொதுவாக சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை தினங்கள். அதேசமயம், முக்கிய நிகழ்வான தீபாவளியன்று நடைபெறும் முகூர்த்த வர்த்தகம், விடுமுறை நாளில் வந்தாலும் அன்று பங்கு வர்த்தகம் நடைபெறும். மற்றப்படி பங்குச் சந்தைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள்தான். ஆனால் தற்போது அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதியான சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்படுவதால் அன்று பங்கு வர்த்தகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

மும்பை பங்குச் சந்தை

இந்நிலையில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சந்தேகத்துக்கு மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) பதில் அளித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 1ம் தேதியான சனிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் வழக்கம் போல் செயல்படும் அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் பங்கு வர்த்தகம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன்

ஒவ்வொரு நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பும் அந்த ஆண்டுக்கான வரவு-செலவு குறித்த மதிப்பீடுகளை மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 பிப்ரவரி 1ம் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்ய உள்ளார். மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் தற்போதே எகிற தொடங்கி விட்டது.