மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மக்களின் எதிர்பார்ப்பு!

 

மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மக்களின் எதிர்பார்ப்பு!

மத்திய பட்ஜெட்டில் எவற்றுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து மக்களிடம் இ.டி. ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் எந்த விஷயத்தில் நிதி அமைச்சர் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கேள்விக்கு 35.40 சதவீதம் பேர் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பதில் அளித்தனர். அடுத்து 31.50 சதவீதம் பேர் வேலைவாய்ப்புக்கும், வருமான வரி குறைப்புக்கு 19.70 சதவீதம் பேரும் ஆதரவு அளித்தனர். விவசாய பிரச்சினைக்கு 13.40 சதவீதம் பேர் மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயம்

வேளாண் துறையில் நிதி அமைச்சர் என்ன செய்யவேண்டும் என்று கேட்டதற்கு 42.80 சதவீதம் பேர் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என கூறினர். 29 சதவீதம் பேர் ஒரு ஏக்கருக்கு நிலையான பேஅவுட் அமைப்பு வேண்டும் என்றும், 21.70 பேர் இலவச தண்ணீர் மற்றும் மின்சாரம் வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதேசமயம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வெறும் 6.50 சதவீதம் பேர் மட்டுமே கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர்.

வரி துறை

வரி பிரிவை பொறுத்தவரை, ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும் பகுதியினர், தனிநபர் வருமான வரிவிதிப்புக்கான அடிப்படையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என விரும்புகின்றனர். நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு பரிசு வழங்க 33 சதவீதம் ஆதரவு அளித்தனர். 80சி பிரிவின்கீழ் கழிவுக்கான வரம்பை அதிகரிக்க வேண்டும் என 19.90 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மேலும் 8.90 சதவீதம் பேர் தற்போதை வரி விகிதங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினர்.

எந்தெந்த துறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து கேட்டதற்கு 34 சதவீதம் பேர் நேரடி வரி அமைப்பில் சீர்திருத்தம் அவசியம் என்று கூறினர். 25.70 சதவீதம் பேர் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றும், 24.70 சதவீதம் பேர் தொழிலாளர் விதிமுறையில் சீர்திருத்தம் அவசியம் என்றும் கூறினர். மின்சார துறையில் சீர்த்திருத்தம் வேண்டும் என்று 15.60 சதவீதம் பேர் கை தூக்கி உள்ளனர்.

வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பிரச்சினைய களைய எந்த துறையில் நிர்மலா சீதாராமன் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டதற்கு ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேர் கல்வி துறையை கை காட்டினர். வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் துறைகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என 27.50 சதவீதம் கூறினர். தொழிலாளர் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என 21.90 சதவீதம் பேரும், 10.60 சதவீதம் பேர் முத்ரா போன்ற திட்டங்களை மேலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

வளர்ச்சியை அதிகரிக்க பட்ஜெட் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அடிப்படைகட்டமைப்பு துறைகளில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும் என 40.60 சதவீதம் பேர் குரல் கொடுத்தனர். தனியார் மயமாக்கலை விரைவுப்படுத்த வேண்டும் என 27.10 சதவீதம் பேர் கூறுகின்றனர். பாதியில் நிற்கும் திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும் என 17.80 சதவீதம் தெரிவித்தனர். 14.5 சதவீதம் பேர் அரசு செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என தெளிவாக கூறினர்.

அடிப்படை கட்டமைப்பு

பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்கு, 36.40 சதவீதம் பேர் அடிப்படை கட்டமைப்பு துறைக்கு ஆதரவு அளித்தனர். அடுத்ததாக விவசாய துறைக்கு 29 சதவீதம் பேர் சப்போர்ட் செய்தனர். திறன் மேம்பாட்டுக்கு 18.70 சதவீதம் பேர் நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என கூறினர். பருவநிலை மற்றும் சுற்றுப்புறச்சூழலுக்காக அதிகம் நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என 15.90 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர்.