மத்திய பட்ஜெட்டின் தயவால் எகிறபோகும் தங்கத்தின் விலை!

 

மத்திய பட்ஜெட்டின் தயவால் எகிறபோகும் தங்கத்தின் விலை!

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க இறக்குமதியால் மத்திய அரசுக்கு எந்தவித பலனும் இல்லை. அதேசமயம், பெரிய அளவில் அன்னிய செலாவணி வெளியேறுகிறது. இதனால் தங்கம் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. தங்க பத்திரம் மற்றும் தங்க டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இதற்கு வரவேற்பு இருந்தாலும் பொதுமக்கள் தங்கத்தை ஆபரணமாகவே வாங்க விரும்புகின்றனர்.

தங்க ஆபரணம்

இதனால், தங்கம் இறக்குமதி குறையவில்லை. தங்கம் இறக்குமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வரியை உயர்த்தினால் தங்கம் இறக்குமதியை குறைத்து விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதன் எதிரொலியாக இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 2.5 சதவீதம் உயர்த்தியது. இதனையடுத்து இனி தங்கம் இறக்குமதிக்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

தங்கம்

இறக்குமதி வரி உயர்வால் தங்கத்தின் அடக்க விலை உயரும். அதன் எதிரொலியாக தங்க ஆபரண நகைகளின் விலை உயரும் என வர்த்தகர்கள் கூறுகின்றனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், தங்கத்தின் விலை  உயர்ந்தால் அதன் விற்பனை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்குவதில் தயக்கம் காட்டுவர்.