மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையே முற்றும் பணிப் போர்-முழு விவரம்

 

மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையே முற்றும் பணிப் போர்-முழு விவரம்

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பணிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது அது மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது

டெல்லி: மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பணிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது அது மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், மத்திய அரசின் மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களை கடுமையாக எதிர்த்தார். மேலும், அவர் பதவியிலிருந்து சென்ற போதும் மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் தங்களுக்கு சாதகமாக இருப்பார் என பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நினைத்தனர். ஆனால், அவரும் மத்திய அரசுக்கு எதிரான மாற்று கருத்துகளை முன் வைத்து வருகிறார். உர்ஜித் படேலின் மூன்று ஆண்டு பதவிக்காலம், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போதைய மோதலால் அவருக்கு பதவி நீட்டிப்புக் கிடைப்பது கேள்விக் குறியாகியுள்ளது. அவரும் பதவி நீடிப்புக்காக மத்திய அரசுடன் ஒத்துழைத்து போக தயாராக இல்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

urjitpatel

இதனிடையே, கடந்த 29-ம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா , ரிசர்வ் வங்கி சுதந்திரத்தை சமீபகாலமாக மத்திய அரசு மதிப்பதில்லை என மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

viralacharya

ரிசார் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவது பேரழிவை ஏற்படுத்தும். விரைவிலோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய சேதத்தை உருவாக்கும். சுதந்திரமான இந்த வங்கியின் முக்கியத்துவத்தை அவர்கள் அப்போது உணர்வார்கள் என மத்திய அரசை ஆச்சார்யா கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சு ரிசர்வ் வங்கியின் சில அதிகாரத்தை மத்திய அரசு குறைக்க வழிவகுத்துள்ளது. அதேசமயம், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான விரிசலையும் அதிகரித்துள்ளதுடன், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே முக்கியப் பிரச்னைகளில் கடந்த பல மாதமாக இருந்து வந்த மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

வட்டி விகிதம், வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டதே இந்த போதல் போக்குக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், ரிசர்வ் வங்கிக்கும் எங்களுக்கும் எந்த மோதலும் இல்லை எனவும், வங்கித் துறையின் வளர்ச்சி கருதியே சில யோசனைகளை தாங்கள் கூறுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

modijaitley

ஆனால், மத்திய அரசின் பரிந்துரைகளை ரிசர்வ வங்கி தொடர்ந்து மறுத்து வருவதும், வங்கிகள் தாறுமாறாக கடன்களை வாரியிறைக்க அனுமதித்துவிட்டு, மத்திய அரசு மீது ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டுவது தவறு என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சில தினங்களுக்கு முன்னர் விமர்சித்துள்ளதும், ரிசர்வ் வங்கி – அரசுக்கு இடையேயான மோதலை வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மற்றும் விரிசல்கள் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளதால் அந்த வங்கி மீது மத்திய அராசு அதிருப்தியில் உள்ள காரணத்தால், ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 7-யை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுநலன்கள் கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஆலோசித்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு வழிமுறைகளை, மத்திய அரசு வழங்க வழிவகுக்கும் இந்த சட்டப்பிரிவு, சுதந்திர இந்தியாவில் இதுவரை ரிசர்வ் வங்கி மீது செயல்படுத்தப்பட வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், ரிசர்வ் வங்கி தனது சுயாட்சியை இழந்து, அதன் சுதந்திரத்தில் தலையிடும் இந்த சட்டபிரிவு, நாட்டின் கருப்பு நாட்களாக கருதப்படும் நிதி நெருக்கடி காலகட்டங்களில் கூட ரிசர்வ் வங்கி மீது செயல்படுத்தப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.