மத்திய அரசு போட்ட ரூ.500ஐ எடுக்க 60 கி.மீ நடந்த பெண்மணி! – 26 ஆயிரம் டெபாசிட் செய்த நன்கொடையாளர்கள்

 

மத்திய அரசு போட்ட ரூ.500ஐ எடுக்க 60 கி.மீ நடந்த பெண்மணி! – 26 ஆயிரம் டெபாசிட் செய்த நன்கொடையாளர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒவ்வொரு ஜன்தன் வங்கிக் கணக்கிலும் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். 500 ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும் என்று தமிழகத்தில் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறோம். அந்த 500க்கு கூட வழியின்றி ஒரு பெண்மணி 60 கி.மீ தூரம் நடந்திருக்கிறார்

உ.பி-யில் ஜன்தன் அக்கவுண்ட் என்று நினைத்து ரூ.500 எடுக்க 60 கி.மீ நடந்து சென்று ஏமாற்றம் அடைந்த பெண்மணி பற்றிய செய்தி வைரலாகி வருகிறது. 
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒவ்வொரு ஜன்தன் வங்கிக் கணக்கிலும் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். 500 ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும் என்று தமிழகத்தில் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறோம். அந்த 500க்கு கூட வழியின்றி ஒரு பெண்மணி 60 கி.மீ தூரம் நடந்திருக்கிறார். வட இந்தியாவில் எந்த அளவுக்கு மக்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள், அறியாமையில் இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த செய்தி.
டெல்லி ஆக்ரா பகுதியில் வசிக்கும் 50 வயதான ராதாதேவி தனது வங்கிக் கணக்கு உள்ள பைரசோபாத் மாவட்டம் பச்சோகரா என்ற ஊரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு தனது மகனுடன் சென்றுள்ளார். ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தன்னுடைய கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வங்கிக்கு நடந்தே சென்றுள்ளார்.
வங்கிக்கு சென்ற பிறகு தான் அவரது வங்கிக் கணக்கு ஜன்தன் கணக்கு அல்ல என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரது கணக்கில் குறைந்தபட்ச பணம் கூட இல்லை. பணம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த ராதாதேவியும் அவரது மகனும் மீண்டும் 30 கி.மீ நடந்தே தங்கள் கிராமம் வந்து சேர்ந்தனர்.
இது தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ரூ.207 மட்டுமே இருந்த அவரது வங்கிக் கணக்கில் தற்போது ரூ.26,000 சேர்ந்துள்ளது. இதுவரை ராதாதேவியின் வங்கிக் கணக்கில் 29 பேர் பணம் டெபாசிட் செய்துள்ளதாக பச்சோகரா கிளை மேலாளர் லக்ஷ்மன் சிங் கூறியுள்ளார். இந்த உதவியால் தான் அடைந்திருக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என ராதாதேவி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். என் நிலைமையை புரிந்து கொண்டு தனக்கு இத்தனை பேர் உதவி செய்வார்கள் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.