மத்திய அரசுடனான மோதல் போக்கு எதிரொலி: பதவி விலகுகிறார் உர்ஜித் பட்டேல்?

 

மத்திய அரசுடனான மோதல் போக்கு எதிரொலி: பதவி விலகுகிறார் உர்ஜித் பட்டேல்?

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும்  இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, பொறுப்பேற்ற உர்ஜித் படேல் தங்களுக்கு சாதகமாக இருப்பார் என பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நினைத்தனர். 

ஆனால், வட்டி விகிதம், வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது. இதன் மூலம், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, வருகின்ற 16-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த 5-ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அந்த நோட்டீசில், கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை வெளியிடாததற்காக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அதிகபட்ச அபராதத்தை ஏன் விதிக்கக் கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடி மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகையை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் வங்கிகளை ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டும், அதை ஏன்வெளியிடவில்லை எனவும் அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், வருகின்ற 19-ஆம் தேதி தன் பதவியிலிருந்து உர்ஜித் பட்டேல் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.