மத்திய அரசின் கோபத்தால் பணிந்த எடப்பாடி! – கடைகளின் நேரத்தை குறைத்ததன் பின்னணி

 

மத்திய அரசின் கோபத்தால் பணிந்த எடப்பாடி! – கடைகளின் நேரத்தை குறைத்ததன் பின்னணி

பொது மக்கள் கொரோனா பீதி துளி கூட இன்றி சாலையில் நடமாடி வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால் கடைகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு குறைத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு ஏற்ற வகையில் நோயாளிகளை கண்டறிந்து பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் இல்லை. மிகக் குறைவான அளவிலேயே பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா பாதிப்பின் முழு முகமும் தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பீதி துளிகூட இன்றி மக்கள் சாலைகளில் நடந்து வருகின்றனர். இளைஞர்கள் சாலைகளில் விளையாடுவது, மோட்டார் பைக்கில் வேகமாக செல்வது என்று தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். கொரோனாவை கண்ணில் காட்டச் சொல்லுங்கள் என்று ஒரு இளைஞர் போலீசிடம் சட்டம் பேசி முட்டி வைத்தியம் வாங்கியதை எல்லாம் பார்த்தோம். பல இடங்களில் மக்கள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் ஊரடங்கை மீறி பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பிரதமர் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளார். மேலும், கொரோனா எந்த அளவுக்கு பரவும் என்ற தீவிரம் புரியாமல் தமிழக அரசு நடந்துகொண்டிருப்பதாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

இதைத் தொடர்ந்தே காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரத்தில் கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று பல மாநிலங்களும் மத்திய அரசிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டனவாம். தொடக்கத்திலேயே தவிர்க்க வேண்டியதை விட்டுவிட்டு இப்போது மாநில அரசுகள் மீதும், மக்கள் மீதும் பாய்ந்து ஒரு பயனும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.