மத்தியப் பிரதேசத்தைக் கைப்பற்ற ஊரடங்கை தாமதப்படுத்தியதா மத்திய அரசு?

 

மத்தியப் பிரதேசத்தைக் கைப்பற்ற ஊரடங்கை தாமதப்படுத்தியதா மத்திய அரசு?

மத்தியப் பிரதேச அரசை கைப்பற்றும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரச தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரானா பாதிப்பு இந்த மாதத்தில் தொடக்கத்திலேயே வெளிப்பட ஆரம்பித்தது. ஆனால், கொரோனா பாதிப்பு இல்லை, வராது என்றே மத்திய மாநில அரசுகள் கூறிவந்தன. கொரோனாவை எதிர்கொள்ள அரசுக்கு இரண்டரை மாத கால அவகாசம் இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் கொரோனா தீவிரமான நிலையில் கூட மாஸ்க், கையுறை, மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நாடு பற்றாக்குறையில் தத்தளிக்கும் நிலையில் ஏற்றுமதி அனுமதிப்பது சரியா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பிறகே, மருத்துவ மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது பா.ஜ.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களுருவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்காமல் இழுத்துக்கொண்டே சென்றதால் ஆட்சி நீடித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் சென்று முறையிட்டது பா.ஜ.க அப்போது கூட, தற்போது கொரோனா பாதிப்பு உள்ளதால், சட்டப் பேரவையை கூட்டுவது பாதிப்பு என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது கமல்நாத் அரசு. 

அந்த நேரத்தில் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசிய மோடி, பொது ஊரடங்கை அறிவிக்காமல் மக்கள் ஊரடங்கு என்று அறிவித்தார். இதற்குள்ளாக கொரோனா பாதிப்பு சிறு நகரங்கள் வரை சென்று சேர்ந்துவிட்டது.

நாடாளுமன்றங்களை ஒத்தி வைக்காமல் தொடர்ந்து பெரிய பாதிப்பு இல்லாதது போல் காட்ட அரசு எடுத்து வந்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆனாலும் விடாப்பிடியாக நாடாளுமன்றம் நடத்தப்பட்டது. 

இவற்றுக்கு மத்தியில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ப்பு முடிந்து, கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு செவ்வாய்க் கிழமை நாடு தழுவிய ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டது. இவை எல்லாம் வைத்து மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கத்தான் இத்தனை தாமதமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.