மத்தியப்பிரதேச தேர்தல்: பிளான் ‘பி’-யை கையில் எடுக்க பாஜக, காங்., அதிரடி திட்டம்

 

மத்தியப்பிரதேச தேர்தல்: பிளான் ‘பி’-யை கையில் எடுக்க பாஜக, காங்., அதிரடி திட்டம்

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பிளான் ‘பி’-யை கையில் எடுக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அதிரடி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

போபால்: மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்,  பிளான் ‘பி’-யை கையில் எடுக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அதிரடி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

முன்னதாக மத்தியப்பிரதேசத்தில் பாஜக 126 இடங்களிலும், காங்கிரஸ் 89 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் மற்றவை 9 இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதேபோல், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், சத்தீஸ்கரில் பாஜக, தெலங்கானாவில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்,  பிளான் ‘பி’-யை கையில் எடுக்க பாஜக ,காங்கிரஸ் கட்சிகள் அதிரடி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் நாற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஏறத்தாழ ஒரே மாதிரி எண்ணிக்கையில் வெல்லக் கூடும் என தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே அந்த மாநிலத்தில்தான் இவ்விரு கட்சிகளும் பிளான் பி-யை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கட்சியில் இருந்து கோபித்துக்கொண்டு சென்று சுயேட்சையாக களமிறங்கிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை தங்களுக்கே ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிக்க வைப்பதுதான் பிளான் பி.

மத்தியப்பிரதேசத்தில் மட்டும் பாஜக-வில் டிக்கெட் கிடைக்கவில்லை என சுமார் ஒரு டஜன் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டனர். அதில் குறைந்தபட்சம் 4 பேராவது வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதால், அவர்களுடன் இப்போதே பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அதேபோல், காங்கிரசும் தனது கட்சியிலிருந்து பிரிந்து சென்று சுயேட்சையாக நின்று வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களை தேடி வருகிறது. இந்த இரு கட்சிகளுமே கைக்கு அருகே வரும் ஆட்சியை ஒன்றிரெண்டு சீட்டுகளால் நழுவ விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளன என்பதால் மத்தியப்பிரதேச தேர்தல் களத்தில் இப்போதே அனல் பறக்கிறது. மத்திய பிரதேச சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 115 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.